Friday, 14 October 2011

காய கற்பம்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்ற ஔவைப்பிராட்டியாரின் கூற்று சொல்லும் அவ்வரிய மானிடப் பிறவியின் வாழ்வானது உயிர், உடல் என்ற இரு கூறுகள் இணைந்ததாகும்.  உடலும் உயிருமான இவ்விரு கூறுகளும் ஒன்றையொன்று விட்டுத் தனித்திருப்பின் யாதொரு பயனும் இல்லை. இதனையேதான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் மொழியான தொன்மைத் தமிழ் மொழியின் எழுத்துக்களும் பறைசாற்றுகின்றன. மெய்யெழுத்துக்களோடு உயிரெழுத்துக்கள் கூடி உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்கள் இல்லையெனில் சொற்கள் உருவாகா.  இதன்மூலம் உயிரும் உடலும் இணைந்தே இருக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணரலாம்.

இத்தகு உயிரானது நம் உடலில் ஒன்றியிருக்கும் வரையே நமது ஆயுள் நீடிக்கிறது. உடலானது பல்வேறு ஆண்டுகளைக் கடக்கும்போது பிணி, மூப்பு போன்ற காரணங்களால் தனது ஸ்திரத்தன்மையை இழந்து வயோதிகத்தை அடைந்து உயிரைத்தன்னுடன் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையை இழக்கிறது. அதாவது உயிரானது அதற்குமேலும் அவ்வுடலில் தங்கியிருக்கவொண்ணாத நிலை ஏற்பட்டு உடலை விட்டு உயிர் பிரிய நேரிடுகிறது.இதன் மூலம் அறிவது யாதெனில் உடல் எவ்வளவு காலம் ஆரோக்கியமாய் இருக்கிறதோ அதுவரை மட்டுமே உயிர் அதனுடன் வாழ முடிகிறது. உடலின் இத்தகைய நிலையற்ற தன்மையறிந்துதான் "காயமே இது பொய்யடா" என்று பாடி இருக்கிறார்கள். உடலை பாதுகாத்துக்கொள்ளவல்லவர்கள் மட்டுமே தனது உயிரையும் நீண்டகாலம் 
காத்துக் கொள்ள முடியும் என்பதையே "உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று திருமூலர் அருளியிருக்கிறார். 

இதனையறிந்தே சித்தர் பெருமக்கள் யாவரும் காயம் என்ற இவ்வுடலை அழியாது என்றும் இளமையாக பேணிக் கொண்டு இறப்பின்றி இருக்க கற்பம் என்னும் வழியைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தி வந்தனர். காயம் என்னும் உடலை நீண்ட நாள் அழியாது பாதுகாத்திருப்பதே காயகற்பமாகும்!

"கற்பம்" என்பது பல மூலிகைகளாலும் முப்புச் சத்துக்களாலும் முறையோடு செய்த அமிழ்தமாகும். அதனை பாகம் தவறாது உட்கொண்டு வந்தால் எப்பொழுதும் முதுமை வராமல் செய்து கொள்ளலாம்.

கற்பத்தில் பல வகையுண்டு.  நந்தீஸ்வரர், போகர்,  கோரக்கர்,உரோமரிஷி, மச்சமுனி, இராமதேவர், அகத்தியர் மற்றும் ஏனைய சித்தர்கள் பலரும் பல்வேறு கற்பங்களையும் உண்டிருக்கிறார்கள்.

இத்தகைய காய கற்ப மூலிகள் சதுரகிரி மலையில் ஏராளமாக இருப்பதை இன்றும் காணலாம்!!

No comments:

Post a Comment